திங்கள், 23 மார்ச், 2009

பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் செயற்பட்டதில்லை; இந்தியா எம்மோடு இருக்க வேண்டும்: பா.நடேசன்

[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 04:50.41 PM GMT +05:30 ]

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் செயற்பட்டதில்லை; அவ்வாறு செயற்படும் நோக்கமும் எமக்கு கிடையாது; இந்தியா எமக்கு அருகில் இருந்து தமிழர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் சி.என்.என் ஐ.பி.என் தொலைக்காட்சிக்கு

பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் தடையாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவிப்பது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

முதலில், 'சிக்கியுள்ள மக்கள்' என்ற சொல் பயன்படுத்தப்படுவது முறையானது அல்ல. இது அவர்களின் நிலம் அவர்கள் தலைமுறை தலைமுறையாக அங்கு வாழ்ந்து வருகின்றனர். சிறிலங்கா அரசு அந்த மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தும் வரை அங்கு மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்கள் 'சிக்கியுள்ள மக்கள்' அல்ல. தமது பழைய வாழ்க்கையை மீண்டும் பெற்றுக்கொள்ள அவர்கள் போராடி முயற்சித்து வருகின்றனர்.

பிரபாகரன் இப்போது எங்கே இருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்த முடியுமா?

நீங்கள் தெரிவித்ததை போல அவை வதந்திகள் தான். தலைவர் இங்கு எமது மக்களுடன் தான் வாழ்கின்றார் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.

தற்போதைய சிக்கலில் இந்தியாவின் நிலைப்பாட்டை விடுதலைப் புலிகளால் மாற்ற முடியுமா? இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் எப்போதும் செயற்பட்டதில்லை, அவ்வாறு செயற்படும் நோக்கமும் எமக்கு கிடையாது. இந்தியாவின் தென்முனையினது பாதுகாப்பு, தமிழீழ மக்களின் அரசியல் நல்வாழ்வோடும் பாதுகாப்போடும் தான் பின்னிப் பிணைந்துள்ளது.

இந்திய அரசின் அதிகாரிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்துவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் விரும்புவாரா?

நிபந்தனைகள் அற்றதும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வை கொண்டதுமான பேச்சுக்களில் ஈடுபட நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.

இந்த பிராந்தியத்தின் வலிமை மிக்க நாடு இந்தியா. அது எங்களின் நண்பன். இந்தியா எப்போதும் எமது பக்கத்தில் இருந்து தமிழர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையை தமது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தி வருவதாக விடுதலைப் புலிகள் கருதுகின்றார்களா?

உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக எல்லாக் கட்சிகளும் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருப்பது உண்டு. ஆனால், அவை தொடர்பாக நான் கருத்துக் கூறுவது பொருத்தமானதாக இருக்காது. இருந்த போதும் ஈழத் தமிழ் மக்களுக்காக எல்லா தமிழக மக்களும் ஒன்றிணைந்து இருப்பது தமிழீழ மக்களுக்கு மகிழ்வைத் தருகின்றது.

இன்று ஈழத் தமிழ் மக்களின் பலமாக இருப்பது தமிழக மக்களினதும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களினதும் ஆதரவுகள் தான் என்றார் பா.நடேசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக