ஞாயிறு, 22 மார்ச், 2009

அரசியல் ஆவேசங்கள்




அரசியல் ஆவேசங்கள்

தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலர் தில்லிக்கு வந்ததோ, பாராளுமன்றத்தின் முன் இலங்கைத் தமிழர் சார்பாகக் கோஷமிட்டதோ தில்லி தினசரிகளில் முக்கியத்துவம் பெறவில்லை. அதை வேடிக்கை பார்க்கக்கூட தெருவில் யாருமில்லை.

- வாஸந்தி


இலங்கையா? இலங்கைத் தமிழரா? தாடி பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்புக் கேட்ட கதையாக, தமிழ்நாடு சம்பந்தமே இல்லாத ஒரு பிரச்சினையை முன்னிறுத்துவதாக வடக்கில் தோற்றம் ஏற்படுத்திற்று. இலங்கையில் நடக்கும் போருக்கு இந்தியா உதவுவதாகத் தமிழகத் தலைவர்கள் சொல்வது சரியான கேலிக்கூத்து என்றார் ஒரு அரசு அதிகாரி என்னிடம்.வட கிழக்கு எல்லையைப் பாதுகாக்கவும், பயங்கரவாதத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபடவுமே நமது ராணுவத் தளவாடங்கள் போதாமையில் திண்டாடும்போது இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ஈடுபட நமக்குப் பைத்தியமா என்றார். அப்பாவித் தமிழருக்கு உதவ நம்மால் இயன்ற அளவுக்கு மருந்தும் மருத்துவமும் உணவுப் பொருளும் அனுப்புகிறோம். இதற்கு மேல் என்ன செய்யமுடியும்? இருக்கிற தலைவலி போதாது என்று இலங்கையுடன் சண்டைக்குச் செல்ல முடியுமா? தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலர் தில்லிக்கு வந்ததோ, பாராளுமன்றத்தின் முன் இலங்கைத் தமிழர் சார்பாகக் கோஷமிட்டதோ தில்லி தினசரிகளில் முக்கியத்துவம் பெறவில்லை. அதை வேடிக்கை பார்க்கக்கூட தெருவில் யாருமில்லை. மரியாதை நிமித்தம் வந்தவர்களை சோனியா காந்தி சந்தித்தார். 40 சீட்டின் பலத்துடன் செல்வாக்குடன் இருக்கும் கூட்டணி நண்பரான கருணாநிதிக்கே எதுவும் செய்யமுடியாமல் போனபோது இவர்களால் என்ன சாதிக்கமுடியும்?

சாமானியன் எட்ட முடியாத உயரத்துக்கு ஆசைப்படமுடியாது என்கிற அர்த்தத்தில் வடக்கத்தியர்கள் சொல்வார்கள் -"தில்லி பஹுத் தூர் ஹை!" [தில்லி இருப்பது வெகு தூரம்!] முகலாயர்கள் தில்லியை ஆண்ட காலத்தில் அந்தச் சொற்றொடர் ஏற்பட்டிருக்கும். சாமானியன் அதிகாரவர்க்கத்துடன் உறவோ நெருக்கமோ வைத்துக்கொள்வது இயலாது என்கிற நிதர்சனப் புரிதல் அது. சமீபத்தில் பத்து நாட்கள் தில்லிக்குச் சென்று வந்ததில் ஒன்று துல்லியமாக விளங்கிற்று. யாருக்கு 'தில்லி பஹுத் தூர் ஹை'யாக இருக்கிறதோ இல்லையோ சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளுக்குப் பின்னும் தமிழ் நாட்டவருக்கு தில்லி வேறு உலகம்.

அதன் மறுபக்கமாக இப்படியும் சொல்லலாம். வடக்கிற்குமட்டுமல்ல, இந்தியாவின் மற்றப் பாகங்களுக்கு தமிழ்நாடு வேறு உலகம். அது வெளிப்படுத்தும் ஆவேசங்கள் புரிந்து கொள்ள முடியாதவை. சம்பந்தமில்லாதவை. நான் அங்கு இருந்த பத்து நாட்களில் தமிழ்நாடு அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த விஷயம் எந்த தேசிய தினசரியிலும் வரவில்லை. வழக்கறிஞர்களின் போராட்டத்தைத்தவிர. அங்கு நான் சந்தித்த எல்லாருமே அவர்களது செயலைக் கண்டித்து தமிழ்நாட்டின் நீதித்துறை இந்த அளவுக்குத் தரமிறங்கிப் போயிற்றா என்று அதிர்ச்சியையும் சலிப்பையும் வெளிப்படுத்தினார்கள்.

எல்லா பத்திரிகையும் தினசரியும் ஸ்ரீ கிருஷ்ணா மிக மரியாதைக்குரியவர், அவர் சொல்லையும் எதிர்ப்பார்களா என்கிற கருத்தைத் தெரிவித்தன. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தமிழ் நாட்டில் எல்லாக் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தினம் ஒரு போராட்டமும் ஊர்வலமுமாகச் சென்று கொண்டிருந்தது அதீதமானதாக, பொறுப்பற்றதாக, கவனம் பெறவேண்டிய முக்கியத்துவம் அற்றதாகக் கருதப்பட்டுவிட்டதாகத் தோன்றிற்று.

தமிழகத்து அரசியல் பாசாங்குத்தனம் இனம் கண்டு கொள்ளப்பட்டுவிட்டதாக செய்திகள் ஓரங்கட்டப்பட்டன.

தில்லியில் தலைவர்களைக் கவலையில் ஆழ்த்தும் விஷயங்கள் ஏராளம். இந்திய எல்லையைத் தொட்டுக்கொண்டிருக்கும் பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் அதிர்வுகள் எல்லாமே இங்கு நேரடியான அதிர்வு தரக்கூடிய விஷயம். மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. நாம் எடுக்கும் முயற்சிகளுக்கெல்லாம் பாகிஸ்தான் அரசு சால்ஜாப்பு சொல்லி நழுவுகிறது. அங்கு யாரிடம் உண்மையான அதிகாரம் இருக்கிறது என்று புரியவில்லை. இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் இருப்பதாக இந்தியா டுடே Conclave அமர்வுக்கு வந்து உரையாற்றிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் குண்டைத் தூக்கிப்போட்டார். அதோடு காஷ்மீர் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வழியினாலேயே இந்திய- பாக் பிரச்சினை தீரும் என்று பழைய பல்லவி பாடினார். அது இரண்டு நாட்களுக்கு எல்லாத் தொலைக்காட்சிச் சானல்களிலும் அலசப்பட்டது.

இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்ட சேதி வந்தது. நிமிஷத்துக்கு நிமிஷம் எல்லா சானல்களிலும் அதைப் பற்றின அலசல். விவாதங்கள். தொட்டுக்கொள்ள பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் அரசியல் கொந்தளிப்பு, மீண்டும் அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுமோ, ஜர்தாரி தலைமறைவாகிவிட்டாரா என்ற பரபரப்பான செய்தி. பங்களாதேசத்தில் ராணுவத்தில் கலகம். தரம்சாலாவில் தலாய்லாமா இந்திய அடைக்கலம் கேட்டு வந்து அறுபது ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி மாபெரும் கூட்டம். உணர்ச்சிபெறுக்கெடுக்கும் புலம்பெயர்ந்தவர்களின் பேச்சுகள்.

இலங்கையா? இலங்கைத் தமிழரா? தாடி பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்புக் கேட்ட கதையாக, தமிழ்நாடு சம்பந்தமே இல்லாத ஒரு பிரச்சினையை முன்னிறுத்துவதாக வடக்கில் தோற்றம் ஏற்படுத்திற்று. இலங்கையில் நடக்கும் போருக்கு இந்தியா உதவுவதாகத் தமிழகத் தலைவர்கள் சொல்வது சரியான கேலிக்கூத்து என்றார் ஒரு அரசு அதிகாரி என்னிடம். வட ,வட கிழக்கு எல்லையைப் பாதுகாக்கவும், பயங்கரவாதத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபடவுமே நமது ராணுவத் தளவாடங்கள் போதாமையில் திண்டாடும்போது இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ஈடுபட நமக்குப் பைத்தியமா என்றார். அப்பாவித் தமிழருக்கு உதவ நம்மால் இயன்ற அளவுக்கு மருந்தும் மருத்துவமும் உணவுப் பொருளும் அனுப்புகிறோம். இதற்கு மேல் என்ன செய்யமுடியும்? இருக்கிற தலைவலி போதாது என்று இலங்கையுடன் சண்டைக்குச் செல்ல முடியுமா? Give me a break!

தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலர் தில்லிக்கு வந்ததோ, பாராளுமன்றத்தின் முன் இலங்கைத் தமிழர் சார்பாகக் கோஷமிட்டதோ தில்லி தினசரிகளில் முக்கியத்துவம் பெறவில்லை. அதை வேடிக்கை பார்க்கக்கூட தெருவில் யாருமில்லை. மரியாதை நிமித்தம் வந்தவர்களை சோனியா காந்தி சந்தித்தார். 40 சீட்டின் பலத்துடன் செல்வாக்குடன் இருக்கும் கூட்டணி நண்பரான கருணாநிதிக்கே எதுவும் செய்யமுடியாமல் போனபோது இவர்களால் என்ன சாதிக்கமுடியும்? பிரச்சினை வெளியுறவு சம்பந்தப்பட்டது. பாகிஸ்தான் நமது வாசலை இடிக்கப் பார்க்கும்போது, பயங்கரவாதத்தைப் பரப்பி காஷ்மீரில் சில்மிஷம் செய்யும் போது, இலங்கையில் நாம் குறுக்கிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசை எந்த வகையிலும் நிர்ப்பந்திக்கமுடியாது என்று சொல்லப்பட்டது. அப்பாவித் தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப் படவேண்டும் என்று நமது கருத்தை வலியுறுத்துவதைத் தவிர வேறு எதுவும் செய்வது இயலாது என்று உணர்த்தப்பட்டது.

சோனியாகாந்தியின் பேச்சு தனக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று காட்டமாகச் சொன்ன பா.ம.க. தலைவர், தமிழனின் உணர்வைப் புரிந்துகொள்ளாத அரசில் தொடர்ந்து மந்திரிப் பதவி வகிக்க வேண்டாம் என்று மகன் அன்புமணியிடம் சொன்னாரா? ரோசம் எல்லாம் தமிழகத்து வீதிகளில் உரத்துக் கத்தும் கோஷங்களில் தான். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இலங்கைத் தமிழரின் பிரச்சினையே முக்கியமாக முன்னிறுத்தப்படும் என்று எல்லாக் கட்சிகளும் சவால் விடுகின்றன. எல்லாரும் இன்று தமிழினத் தலைவர்கள். திராவிடப் போராட்டம் துவங்கிய காலத்திலிருந்து காங்கிரஸ்ஸுக்கு எதிராகக் கொடிபிடித்து, பிரிவினை கோஷமெழுப்பி, ஹிந்தி ஒழிக என்று நாடே அதிர கூக்குரலிட்டு, தண்டவாளத்தில் படுத்து மறியல் செய்து, ஆட்சியைப் பிடித்து திராவிட ஆட்சியை ஆரம்பித்து, தமிழகத்தில் காங்கிரஸ்ஸின் மீள் வரவுக்கு சமாதிகட்டிய கட்சியின் தலைவரும், தமிழினத்தலைவர் என்று வரலாறு சொல்லும் என்ற நம்பிக்கையில் இருந்தவருமான கருணாநிதியை இன்று ஒரு பார்ப்பனப் பெண், பரம வைரி ஜெயலலிதா, தமிழினத் துரோகி என்கிறார். அந்தச் சாடலே வரும் தேர்தலில் தனக்கு வெற்றியைக் கொடுக்கப் போகும் மந்திரச் சொல் என்று நம்புகிறார்.

கருணாநிதிக்கு, தினமும் ஜெயலலிதாவுக்கு முரசொலியில் மறுப்புச் சொல்வதும் 1981இல், 85இல், 95இல் 2001இல் ஜெயலலிதா என்ன செய்தார் என்ற புள்ளிவிவரம் கொடுப்பதுமே இடுப்பை ஒடிக்கிறது. காங்கிரஸ்ஸுடன் கூட்டணிசேர்ந்து நிறைய லாபம் பார்த்தாயிற்று. நடு ஆற்றிலிருந்து திரும்பமுடியாது. பாஜக பலமாக இல்லை. காங்கிரஸ் திரும்பினாலும் திரும்பலாம். அதனால் அணி மாற்றம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. கூட்டணி பலத்தைக் கூட்டுவது முக்கியம். அது இருந்தால் ஜெயலலிதா கொக்கரிக்கமுடியாது.தமிழகத்தில் எந்தத் தேர்தலானாலும் அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே இருக்கும் விரோதமே முக்கியப் பிரச்சினையாக இருக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முப்பது நாட்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்று இந்தச் சந்தையில் ஆசைகாட்டி கூப்பாடு போடுகிறது பாஜக. இலங்கைத் தமிழர் பிரச்சினை என்கிற தமிழக அரசியலின் கோஷமே ஒரு பம்மாத்து என்று தில்லி வட்டாரங்கள் நமக்கு முன்னால் புரிந்துகொண்டுவிட்டன.

விந்திய மலைக்கு அப்பால் இந்த கோஷங்கள் காதில் விழாது. மைய தேசியக் கட்சிகளுக்கு அவற்றைப்பற்றின எந்த அபிப்பிராயமும் இல்லை. கோஷம் எதுவானால் என்ன? எதைச்சொல்லியாவது வாக்கு கிடைத்தால் என்ன பிரச்சினை?

ஆங்கிலத்தில் 'disconnect' என்ற சொல் உண்டு. யதார்த்தத்திலிருந்து தொடர்பற்ற தன்மை. ஒரு பத்திரிகை நண்பர் ஒரு முறை சென்னையில் அங்கலாய்த்தார். தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பாமர மக்களுக்கும் இருக்கும் தொடர்பற்ற தன்மையைப் பற்றி. இன்றைய இளைஞர்களுக்கு தமது வாழ்க்கையில் முன்னேற என்ன வழி என்பது மட்டுமே பிரச்சினை. அதுவே அவர்களது இலக்கு. அவர்களது பார்வை இப்போது உலகளாவியது. தமிழ் நாட்டுக்கு அப்பால் விரிகிறது, சுய முன்னேற்றத்திற்காக. தமிழ்ப் பற்றோ வேறு எதுவோ அவர்களது agenda இல்லை. இந்த அரசியல்வாதிகள் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்றார். இந்த'disconnect' ஏதாவது ஒரு ரூபத்தில் எல்லா மாநிலத்து எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் தமிழ் நாடு ஒரு விதத்தில் தீவிரமாக முரண்படுகிறது.

மத்தியில் கூட்டணி ஆட்சி ஆரம்பித்த நாட்களிலிருந்து, நமது மாநிலக் கட்சிகள் வாய்ப்புக் கிடைத்த மாத்திரத்தில் மந்திரிப் பதவிக்குப் போட்டி போட்டுக்கொண்டு ஆட்சியில் பங்கு பெறுகின்றன. அதனால் பலவகையில் லாபம் கண்டிருக்கின்றன. தனி நபர்கள் அடைந்திருக்கும் செல்வாக்கு அளப்பற்றது. ஆனால் அது சொந்த லாபத்துக்கான குறுகிய நோக்கிலேயே நடந்த பங்காற்றல் என்று தெளிவாகிவிட்டது. தமிழ்நாட்டுக்கு வெளியே என்ன நடக்கிறதென்று யாருக்கும் அக்கறையில்லை. நாட்டைத் தாக்கும் அவசரப் பிரச்சினைகள் என்ன என்பதில் நாட்டமில்லை. அவற்றைத் தமிழ்த் தொலைக்காட்சி சானல்கள் விவாதிப்பதில்லை.

தேசிய நோக்கு, தேசப்பற்று என்பவை இன்று காலாவதியான கருத்தாக்கங்கள் என்றாலும் , மக்கள் நலன் என்பது கூட அவர்களுக்குக் காலாவதியான கருத்தாக்கமாகப் படுகிறது. பாமர அடிமை ஸாங்கோபான்ஸா சொல்லச் சொல்லக் கேட்காமல் அவனது எஜமானன் காற்றாலைகளை நான்கு கைகள் கொண்ட ராட்சசஸர்கள் என்று தாக்கச் சென்றதுபோல இலங்கைத் தமிழர் பிரச்சினை என்கிற அஸ்திரத்தை மாநிலப் பிரச்சினையாக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.யாருக்காக கோஷம் எழுப்புகிறார்களோ அவர்களுக்கு இதனால் ஏதும் லாபமில்லை என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதனால் யாருக்கு நன்மை என்பது அவர்களுக்கும் சர்வ வல்லமை பொருந்திய ஈசனுக்குமே வெளிச்சம்.

மக்கள் வாக்கு மகேசன் வாக்கு என்றும் ஒப்புக்கொள்பவர்கள் இவர்கள். பின் , இத்தனைப் பாசாங்குத்தனம் செய்வதற்கு எப்படித் துணிகிறார்கள்? ஸான்கோபான்ஸாவின் எஜமானனுக்கும் [Don Quixote] இவர்களுக்கும் வித்யாசமில்லை.


நன்றி: உயிர்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக