திங்கள், 23 மார்ச், 2009

இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கைகழுவிவிட்டார் கருணாநிதி: பாமக ராமதாஸ்

இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கைகழுவிவிட்டார் கருணாநிதி: பாமக ராமதாஸ்

[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2009, 01:50.15 AM GMT +05:30 ]

இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கை கழுவிவிட்டார் கருணாநிதி என்று குற்றம் சாட்டியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது தொடர்பாக ராமதாஸ் அவர்கள் நேற்று திங்கட்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

திங்கட்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை இனப் படுகொலைப் போரைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்ற உலகத் தமிழர்களின் குரல் இப்போதுதான் உலக நாடுகளின் காதுகளில் எட்டத் தொடங்கி இருக்கிறது.

அதன் விளைவாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் போரை நிறுத்தும்படி ஓங்கி குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றன.
வெறும் மனிதாபிமான அடிப்படையில், உலக நாடுகள் செயல்படத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதில் உணர்வுபூர்வமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அரசு இதுவரை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கும் கடமையைத் தாமதமின்றி இந்திய அரசு ஆற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், ""இலங்கை ஓர் இறையாண்மை மிக்க நாடு, அப்படி இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் மீது ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் அழுத்தத்தைக் கொடுக்க முடியுமே தவிர அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது'' என்ற ரீதியில் தமிழக முதல்வர் கூறியிருப்பது ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

இதற்கு மேல் எதுவும் செய்வதற்கில்லை என்று இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் தமிழக அரசும், முதல்வரும் கை கழுவி விட்டனர் என்பதையே முதல்வர் கருணாநிதியின் கருத்து எடுத்துக் காட்டுகிறது.
இறையாண்மை மிக்க அண்டை நாட்டில் நடைபெறும் பயங்கர நிகழ்வுகளில், இந்தியா ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது என்ற தவறான கருத்து இதுவரை தில்லியில்தான் இருந்தது.

இப்போது, சென்னைக்கும் அது பரவிவிட்டது என்பதையே முதல்வரின் கருத்து எடுத்துக் காட்டுகிறது. ஒரு நாட்டின் இறையாண்மை என்பதில், அந்த நாட்டில் வாழும் எல்லா தரப்பு மக்களையும், பாதுகாப்பதற்கான முதன்மையான பொறுப்பு அடங்கி இருக்கிறது.

இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி இருக்கிறது. ஒரு நாட்டின் அரசு திட்டமிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவாக, இனப் படுகொலை செய்யும் நோக்கில் அல்லது வேறு நோக்கில் பெருமளவு உயிரிழப்பு ஏற்படும்போது அல்லது ஏற்படலாம் என்று சந்தேகப்படும்போது, இதர நாடுகளின் போர்ப் படையின் தலையீடும் அவசியமாகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை வகுத்துத் தந்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

உள்நாட்டுப் போர், கலகம், அடக்குமுறை அல்லது அரசின் தோல்வியின் விளைவாக மக்கள் துன்பப்பட்டால், சம்பந்தப்பட்ட நாடு, அதைத் தடுக்க அல்லது தவிர்க்க விரும்பவில்லையானால் அல்லது இயலவில்லையானால் அங்கு தலையிடாமைக் கொள்கை என்பது பாதுகாப்பதற்கான பன்னாட்டுப் பொறுப்புக்கு வழிவிட்டு விலகுகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் இதுவரையில் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நாடுகள் தலையிட்டு இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றன.

இலங்கை அரசின் பொருளாதாரத் தடையினால், ஈழத் தமிழர்கள் பட்டினியால் வாடியபோது, இந்தியா தனது போர் விமானங்களை அனுப்பி, உணவுப் பொருள்களை விநியோகம் செய்திருக்கிறது.

ஈழப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. அவையெல்லாம், இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான். அப்போதெல்லாம், இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு என்று இந்தியா கருதவில்லை.

ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தியா அப்போது செயல்பட்டது. அத்தகைய உணர்வும், துணிச்சலும் இப்போது இந்திய அரசுக்கு வேண்டும்.

அத்தகைய உணர்வை இந்திய அரசு பெறவும், துணிச்சலோடு செயல்படவும் தமிழக அரசும், முதல்வரும் குரல் கொடுக்க வேண்டும்.

போரை நிறுத்தாவிட்டால் காமன்வெல்த் போன்ற அமைப்புகளில் இருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும் என்ற குரல் இப்போது பிரிட்டனில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்தியா துணை நிற்க வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக