ஞாயிறு, 3 மே, 2009

சிறிலங்காவுக்கு பணம் கொடுக்காதீர்கள்: அகாசியிடம் த.தே.கூ. வலியுறுத்தல்

[ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2009, 09:15 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
வன்னிப்பெரு நிலப்பரப்பை இராணுவ பிரதேசமாக்கி தமிழர் தாயக கோட்பாட்டை நில ரீதியாக பிளவுபடுத்தி தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டும் சிறிலங்கா அரசாங்கத்திடம் இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் நிவாரணப் பணிகளுக்காக 480 மில்லியன் நிதி வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜப்பான் தூதுவர் யசூசி அகாசியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு சென்றுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகாசியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன், கனகசபை, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் ஆகியோர் நேற்று சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

இச்சந்திப்பு மிகவும் காரசாரமான விவாதங்களுடன் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜப்பான் தூதுவர் யசூசி அகாசியுடன் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்ததாவது:

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜப்பான் மகிந்த அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ள 480 மில்லியன் நிதி போருக்கே செலவிடப்படும். ஆகவே, சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்யான பரப்புரைகளை ஏற்று தமிழின அழிப்பு போருக்கு ஜப்பான் உதவி அளிக்கக்கூடாது.

வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இடம்பெயா்ந்த மக்களை ஐந்து வருடங்களுக்கு நிரந்தரமாக அப்படியே வைத்திருப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து 150 மைல்களுக்கு அப்பால் உள்ள காடுகளை அழித்து நிரந்தரமாக கொட்டில்களை அமைத்து அங்கு இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்தி அடிமைகளாக வைத்திருக்க முற்படும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஜப்பான் நிதி வழங்குகின்றமை வேதனைக்குரியது.

இந்த மக்கள் வன்னியில் சொந்த நிலபுலங்களுடன் வாழ்ந்தவர்கள்; தொழில் புரிந்தவர்கள். மக்களை அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தினாலே போதும்.

அவர்கள் தாங்களாகவே உழைத்து வாழ்வார்கள். மக்களிடம் மாடுகள் பண்ணைகள் உண்டு. நீங்கள் நிதி கொடுக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

ஆனால், போரினால் அவர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் அழிந்துள்ளன; தேசமடைந்துள்ளன. அவற்றைத் திருத்துவதற்கு நிதி வழங்கி நட்ட ஈட்டையும் வழங்குங்கள் என விளக்கி கூறியதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அதேவேளையில் இதற்கு பதிலளித்த யசூசி அகாசி, சிறிலங்கா அரசாங்கம் ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டது. அத்துடன், இடம்பெயர்ந்தவர்கள் படிப்படியாக மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று மகிந்த அரசாங்கம் தன்னிடம் உத்தரவாதம் அளித்ததாக கூறியிருக்கின்றார்.

யசூசி அகாசி, அவ்வாறு கூறியதை மறுத்துரைத்த இரா.சம்பந்தன், சிறிலங்கா அரசாங்கத்தின் ஜனநாயகம் பற்றி எங்களுக்கு ஜப்பான் கூறவேண்டிய அவசியம் இல்லை என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

சிறிலங்காவின் ஜனநாயகம் பற்றி யசூசி அகாசி கூறிய விடயம் தொடர்பில் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டிய விடயங்கள் குறித்து சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்ததாவது:

லசந்த விக்கிரமதுங்க உட்பட இதுவரை 20 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை.

அரச படைகளுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுக்களும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினரும் இக்கொலைகளை செய்துள்ளனர். வேறு யாரும் அல்ல. அதற்கான ஆதாரங்களை கூட்டமைப்பினராகிய நாங்கள் அரச தலைவரிடம் நேரடியாக கையளித்தும் இன்னமும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

சிறிலங்கா அரசாங்கம் 1948 ஆம் ஆண்டில் இருந்து பல உறுதிமொழிகளை தமிழர்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை

கனரக ஆயுதங்களை பாவிக்கமாட்டோம் என இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழியைக்கூட சிறிலங்கா அரசாங்கம் இன்று மீறியுள்ளது.

உத்தரவாதங்களை சிறிலங்கா அரசாங்கம் தாராளமாக வழங்கும். அதில் பிரச்சினை இல்லை. ஆனால் அந்த உறுதிமொழிகள் அனைத்தும் வெற்றுக் காகிதங்கள்தான்.

முள்ளிவாய்க்காலில் இயங்கிவந்த தற்காலிக மருத்துவமனை கூட இன்று (நேற்று) படையினரின் எறிகணைத்தாக்குதலுக்கு உள்ளாகி 64 நோயாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுதான் சிறிலங்கா அரசாங்கத்தின் ஜனநாயகம் என்று சம்பந்தன் இடித்துரைத்தார்

அதேவேளையில் ஜப்பான் போன்ற அனைத்துலக நாடுகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேரடியாக உதவிபுரிவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும என்று சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்ததாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இரண்டாம் உலக போரின்போது ஜப்பான் கிரோசிமா, நாகசாகி போன்ற நகரங்களில் அணுக்குண்டுகள் வீசப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட அவலமும் அதன் தாக்கம் இன்றுவரை நீடிப்பதும் ஜப்பானுக்கு புரியும்.

இந்நிலையில் போரில் தமிழ் மக்கள் படும் அவலங்கள், வேதனைகள் பற்றி உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை என காரசாரமாக எடுத்து விளக்கியதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இச்சந்திப்பு கடுமையான வாக்குவாதத்துடன் இடம்பெற்றமையினால் எதிர்வரும் காலங்களில் யசூசி அகாசி கொழும்புக்கு வரும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்காது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக